வழிபாட்டுத் தலங்களுக்கு மீண்டும் அனுமதி ரத்து..! மதக் கூட்டங்களுக்கும் தடை..!

By Manikandan S R S  |  First Published May 17, 2020, 4:08 PM IST

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். 


தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 4ம் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மே 31 ஆம் தேதி நள்ளிரவு வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதும் பாதிப்பு குறைவாக இருக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அவசர பாஸ் இல்லாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் நோய் தொற்று பரவாமல் தடுக்க அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே மக்கள் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மறுஉத்தரவு வரை தொடர்ந்து அமலில் இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தளர்வுகள் கிடையாது எனவும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

click me!