ஒரே நாளில் 40 பேர்..! திருநெல்வேலியில் திரும்பவும் கொடூரம் காட்டும் கொரோனா..!

By Manikandan S R SFirst Published May 16, 2020, 11:52 AM IST
Highlights

கடந்த 4 நாட்களாக பாதிப்புகள் அதிகரித்து நேற்று வரை 136 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,599 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,435 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் 71 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது வரை ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன. டெல்லி சென்று வந்தவர்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகரிக்கத் தொடங்கியதும் தென்மாவட்டமான திருநெல்வேலியிலும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. அங்கு மேலப்பாளையம் பகுதியில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் அந்நகரம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது. 63 பேர் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் பலியானார். அதன் பிறகு இரு வாரங்களாக புதிய பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. இந்தநிலையில் தற்போது மீண்டும் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவுதல் வேகமெடுத்துள்ளது.

கடந்த 4 நாட்களாக பாதிப்புகள் அதிகரித்து நேற்று வரை 136 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நெல்லைக்கு வெளிமாநிலங்கள் மற்றும்  வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருகிறவர்கள் அனைவரும் மாவட்ட எல்லையான கங்கை கொண்டானில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இன்று காலையில் இருந்து தற்போது வரை மட்டும் 600 மேற்பட்டோர் வெளியிடங்களில் இருந்து வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

அதே போல அண்டை மாவட்டமான தென்காசியில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இருமாவட்டங்களிலும் சேர்த்து இன்று 48 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் தற்போது வரை 63 பேர் குணமடைந்துள்ளனர். வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் மூலமாகவே தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!