விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்தியம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 326-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ், பல்லை பிடுங்கிய டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. அவர் மட்டுமின்றி பல காவல்ரகள் இணைந்து விசாரணை கைதிகளிடம் மோசமான நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்த அவர் ஏஎஸ்பி பதவியில் இருந்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த பெ. அமுதா ஐபிஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி இன்று பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி அமுதா ஐபிஎஸ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மீது இதுபோன்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் வெளியாகி ஒருமாத காலம் ஆன நிலையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
பல்பீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்திருந்தாலும் அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307-இன் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சூர்யா என்பவரின் தாத்தா விசாரணை அதிகாரி அமுதா ஐபிஎஸ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், காவல்துறையினர் மிரட்டலால்தான் சூர்யா பிறழ் சாட்சியம் அளித்தார் எனக் கூறி இருக்கிறார்.