நம் அனைவருக்கும் இந்து என்கிற உணர்வு இருக்க வேண்டும் என்று தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரகுமார் பேசியது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். அதிமுக சார்பாக வெற்றிபெற்ற ஒரே மக்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து பாஜக உறுப்பினர் போலவே செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேனி அருகே இருக்கும் சின்னமன்னூரில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவினை துவக்கி வைக்க ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வந்திருந்தார். கழுத்தில் காவித் துண்டு அணிந்து இந்து முன்னணி கொடியை அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் "ஒவ்வொரு வருடமும் தவறாமல் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கெடுத்து வருகிறேன். கடந்த வருடமும் இந்த பகுதியில் நான் விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தேன். விநாயகர் அருளால் தான் நான் தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கிறேன்.
நம் அனைவருக்கும் முதலில் இந்து என்கிற உணர்வு இருக்க வேண்டும். பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக மாற்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாம் அனைவரும் இணைந்து வலிமையான பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாக பாடுபட வேண்டும்" என்று கூறினார்.
மக்களவை உறுப்பினராக இருக்கும் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.