மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கின்றார்.
மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக மக்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடித்தி வருகின்றனர்.
தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
undefined
இது தொடர்பாக மதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில்; தேனி மாவட்டத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை அழிக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிராக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 2019 ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கின்றார்.
நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த க.கா.ரா.லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, கி.வெ.பொன்னையன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். பிரச்சாரப் பயணத்துக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் மேற்கொண்டு வருகிறார்.
வரும் 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு ஆண்டிபட்டியில் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கும் வைகோ எஸ்.எஸ்.புரம், எஸ்.ரெங்கநாதபுரம், நாச்சியார்புரம், ரெங்கசமுத்திரம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, பெரியகுளம், லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி வரை சென்று பின் அல்லி நகரத்தில் பிரச்சாரப் பயணத்தை முடிக்கிறார்.
21-ம் தேதி புதன்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு அரண்மனைப்புதூரில் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கும் வைகோ, கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரெங்கபுரம், வெங்கடாசலபுரம், காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, சின்னமனூர், மார்க்கையன் கோட்டை, குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி வரை சென்று பின் உப்புக்கோட்டையில் பிரச்சாரப் பயணத்தை முடிக்கிறார்.
22-ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு போடிநாயக்கனூரில் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கும் வைகோ, சில்லுமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், திம்மிநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை பொட்டிப்புரம், தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை, உத்தமபாளையம், கம்பம் என சென்று பிரச்சாரப் பயணத்தை கூடலூரில் முடிக்கிறார் என்று இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.