தேனி மாவட்டம் தேனி அருகே வாழையாத்துப்பட்டி கிராமத்தில் 150 அடி அழக்கிணற்றில் குதித்து நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் தேனி அருகே வாழையாத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் போஸ் என்பவரது மனைவி முருகேஸ்வரி. இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் இன்று காலை முருகேஸ்வரி தனது வீட்டின் அருகில் உள்ள சுற்றுச்சுவர் இல்லாத 150 அடி ஆழ கிணற்றில் குதித்துள்ளார்.
இதனைக் கண்ட அவரது தாயார் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகள் இல்லாத கிணற்றில் கயிறு கட்டி இறங்கி முருகேஸ்வரியை தண்ணீருக்குள் தேட முற்பட்டனர். ஆனால் தண்ணீர் 50 அடி ஆழம் வரை இருந்ததால் முருகேஸ்வரியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக டிராக்டர் கம்பரசர் மூலமாக ஆக்சிஜன் மாஸ்க் தயார் செய்து தண்ணீருக்குள் மூழ்கி உடலை தேடத் தொடங்கினர். 5 மணி நேர தேடலுக்கு பின் முருகேஸ்வரி உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்க்காக அனுப்பி வைத்தனர்.
நாகை அருகே மீனவ கிராமத்தில் மோதல்; திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல்
உயிரிழந்த முருகேஸ்வரிக்கு இன்னும் ஐந்து நாட்களில் குழந்தை பிறக்க இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்கொலை செய்து கொண்டது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.