BREAKING : முல்லை பெரியாறு அணை பகுதியில் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களகவே முல்லை பெரியாறு அணை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் வந்தவண்ணம் உள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டம் 142 அடியை எட்டும் போது தான் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்படும் என்று ஒப்பந்தம் உள்ளது. ஆனால் , கேரளாவில் வெளுத்து வாங்கிய கனமழையினால், தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, நீர்மட்டம் 142 அடியிலிருந்து குறைந்து 136 அடியாக உள்ளபோதே கேரள நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பேபி அணையிலிருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.
undefined
இதற்கு தமிழக விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், முல்லை பெரியாற்றின் தண்ணீரை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் பெரும்பளவு பாதிக்கப்படுவர் எனவும் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாழாய் போக வழிவகுக்கும் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், இது குறித்து அறிக்கை வெளியிட்ட நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள, மாதவாரியான அட்டவணையை பின்பற்றியே நீர் திறக்கப்படுவதாகவும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறினார்.
அணையை தமிழக அரசு கவனமாக இயக்கி வருவதாகவும், இதற்கு புறம்பாக வரும் எந்த தகவலும் உண்மையானவை அல்ல, அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை என்று அதிரடியாக தெரிவித்தார். ஆனால் கேரள தரப்பிலிருந்து முல்லை பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டது. சுமார் 8 ஆயிரம் கன அடி வரை தண்ணீரானது பேபி அணையிலிருந்து கேரள நீர்வளத்துறை அமைச்சரால் திறக்கப்பட்டது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.
பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது என்றும், இந்தக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த அனுமதி தங்களுக்கு உதவும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்நிலையில் கேரள வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் பேபி அணைக்கு கீழே உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் இந்த சம்பவம் தமிழக மக்களிடத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கேரளாவின் பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த 6ஆம் தேதி வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் முல்லை பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணை மிக பாதுகாப்பாக உள்ளதாகவும் பேட்டியளித்தார். இதனையடுத்து மற்றொரு பிரச்சனையாக, பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு முதலில் ஒப்புதல் வழங்கிய கேரள அரசு அதனை திரும்பப் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது .இந்நிலையில் தான் முல்லை பெரியாறு அணை பகுதியில் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்து செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் வல்லக்காடு - முல்லை பெரியார் காட்டு சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவை அளவிடும் கருவிகளை பொருத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியுள்ளது.