ரூ. 100-ஐ கடந்த டீசல் விலை... கேக் வெட்டிய லாரி உரிமையாளர்கள்.. ஏன் தெரியுமா.?

By Asianet TamilFirst Published Oct 19, 2021, 9:42 AM IST
Highlights

டீசலின் விலை ரூ.100-ஐ கடந்த நிலையில், தங்கள் எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் கேக் வெட்டி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் லாரி உரிமையாளர்கள். 
 

சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயித்து வருகின்றன. அண்மைக் காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ளபோதிலும், நம் நாட்டில் விலை தொடர்ந்து அதிகரித்துகொண்டே செல்கிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு டீசலின் விலை ரூ.100 ஐ தொட்டது. ஏற்கனவே பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில், டீசலின் விலையும் ரூ.100 ஐ தாண்டியிருப்பது கனரக வாகனங்கள் வைத்திருப்போரை கதி கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டியதை ஜீரணிக்க முடியாத தேனியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள். பெரியகுளத்தில் ஒன்றுகூடிய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், டீசலின் விலை சதம் அடித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேக் வெட்டி தங்களுடைய எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் பதிவு செய்தனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், “லாரி தொழில் தடுமாற்றத்தில் உள்ளது. தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்வது மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். வாடகை அதிகரிக்கும். இதனால் பொருட்களின் விலையும் உயரும். பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாக்கும். எனவே, எங்கள் கஷ்டத்தை  வெளிப்படுத்தும் நோக்கில் வித்தியாசமாக கேக் வெட்டினோம்” என்று தெரிவித்தனர். 

click me!