AriKomban : அரி கொம்பன் அட்டகாசம்! ஊருக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டிய யானை! பதறி ஓடிய பொதுமக்கள்!

By Dinesh TG  |  First Published May 27, 2023, 11:27 AM IST

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் புகுந்து அரி கொம்பன் யானை பொதுமக்களை விரட்டி செல்லும் அதிர்ச்சி காட்சி வெளியாகியது. யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 


கேரள மாநிலத்தில் பத்திருக்கும் மேற்பட்டோரை கொன்று மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரி கொம்பன் என்ற காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர்.

யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தி தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர்.



அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிகொம்பன் யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றுள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலினை அறிந்து விரைந்து வந்த தமிழக மற்றும் கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்போதைக்கு பொதுமக்களையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் செல்ல விடாமல் அங்கு பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றி யானையின் செயல்பாட்டினை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விளை நிலங்களுக்குள் புகுந்த அரி கொம்பன் யானை அங்கேயே நின்றிருப்பது விவசாயிகளிடம் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று காலையில் கம்பம் நகருக்குள் புகுந்த அரி கொம்பன் கூலத்தேவர் தெருவில் புகுந்து பொதுமக்களை விரட்டியது. ஊருக்குள் புகுந்த யானையால் பொதுமக்களுக்கு போலீசார் வாகனங்களில் ஒலி எழுப்பி எச்சரித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கை மீறி தெருவில் நின்றிருந்தவர்களை அரி கொம்பன் யானை விரட்டும் பரபரப்புக் காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கம்பம் நகருக்குள் யானை உலா வருவது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

click me!