தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறிய அமைச்சர் மூர்த்திக்கு வெற்றி எங்களுக்கு தான் இன்றே பதவியை விட்டு விலகுங்கள் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேனி பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் நிச்சயம் வெற்றி பெறுவார். அப்படி வெற்றி பெறாத பட்சத்தில் தனது கட்சி பொறுப்பு, அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வேன் என பேசியிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.
தேர்தல் முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை; உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை
undefined
இந்நிலையில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைபொதுச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுக அமைச்சர் தேர்தல் முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். இன்றே பதவி விலகுவதாக ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதுங்கள். ஏனென்றால் வெற்றி எங்கள் வேட்பாளருக்கு தான்.
தேனி தொகுதியை பொறுத்த வரையில் மக்களுக்கு தெரிந்த ஒரே சின்னம் இரட்டை இலை தான். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோரை பார்க்கும் போது மக்களுக்கு இரட்டை இலை சின்னம் தான் ஞாபகத்திற்கு வரும். மின் கட்டண உயர்வு, போதைப் பொருள் கடத்தல் என திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே எங்கள் வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.