தேனி மாவட்டம் கம்பத்தில் அண்மையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண் எடுத்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் (வயது 17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
வெகு நேரமாக வீட்டில் ஆள் இல்லாததால் உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்த பொழுது மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மாணவனை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் தற்கொலை குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மாணவன் மதிப்பெண்கள் வெளியிட்ட கடந்த இரண்டு நாட்களாக நான் நினைத்தது போல் மதிப்பெண் எனக்கு கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தான் 500க்கு மேல் மதிப்பெண் வாங்குவேன் என நினைத்திருந்ததாகவும், தன்னால் 500க்கு மேல் வாங்க முடியவில்லை என மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.