தைரியம் இருந்தால், தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க கால் வையுங்கள் என சவால் விடுத்துள்ள தஞ்சை மாவட்ட விவசாயிகள், உயிரை கொடுத்தாவது தடுப்போம் என எச்சரித்து உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் வடசேரி, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவங்கோட்டை, கீழக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதற்கான ஏல முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி விவசாயிகளிடையே மத்திய அரசின் செயல்பாடுகள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், 3 போகம் விவசாயம் நடைபெறுகிற இந்த பகுதியில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கி இருப்பதாக கூறுவதை கடுமையாக கண்டிக்கிறோம்.
திருவாரூரில் புதுமாப்பிள்ளை தொணியில் குதிரை வண்டியில் சவாரி செய்த உதயநிதி ஸ்டாலின்
நாங்கள் போராடி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு பெற்று உள்ள நிலையில், மத்திய அரசின் நிலக்கரி எடுப்பு அறிவிப்புக்கு மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தைரியம் இருந்தால் நிலக்கரி எடுக்க கால் வையுங்கள் என மத்திய அரசுக்கு சவால் விடுத்த விவசாயிகள், உயிரை கொடுத்தாவது இத்திட்டத்தினை தடுப்போம் என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறுகையில், நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு வேளாண் மண்டலத்தில் நிச்சயம் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இதனை முதல்வரே சட்டசபையில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.