கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு வரும் நபர்கள் கைலி, நைட்டி, அரைக்கால் சட்டை ஆகிய அணிந்து வர கூடாது என்று முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
விஏஓ அலுவலகத்திற்கு கைலி, நைட்டி அணிந்து வந்தால் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகையால் சர்ச்சை எழுந்த நிலையில் அவருக்கு தற்காலிகமாக பணி விடுவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரிகாலன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர், ஓய்வுபெற்ற விமானப்படை வீரர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு வரும் நபர்கள் கைலி, நைட்டி, அரைக்கால் சட்டை ஆகிய அணிந்து வர கூடாது என்று முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதனை மீறி கைலி, நைட்டி, அரைக்கால் சட்டை அணிந்து வருபவர்களை அலுவலகத்தில் விட மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வாங்க வந்த விவசாயி ஒருவர் கைலி அணிந்து வந்ததால் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரிகாலன் மீது புகார்கள் வந்ததால் அவரை வேறு வருவாய்கோட்டத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அதுவரை தற்காலிகமாக பணியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் கூறியுள்ளார்.