வரலாற்றை புரட்டிப் போடும் கீழடி.. தமிழர் நாகரிகத்தின் புதிய மைல் கல்!!

By Asianet TamilFirst Published Sep 21, 2019, 3:36 PM IST
Highlights

கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வுகளின் முடிவில் தமிழர்கள் கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியறிவு பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை அருகே இருக்கும் கீழடியில் நான்காம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆய்வுகளின் முடிவை 'கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்' என்கிற தலைப்பில் தொகுப்பாக அமைச்சர் மாபா. பாண்டியராஜன் வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின்படி தமிழர்களின் பண்பாடு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கிமு 6ம் நூற்றாண்டு முதல் கிபி முதல் நூற்றாண்டு வரை கீழடியை சுற்றியிருக்கும் பகுதிகள் சிறந்த பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் பிராமி எழுத்துக்களில் குவிரன், ஆதன் என்கிற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய உடைந்த பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றையே மாற்ற கூடிய அளவிற்கு கீழடி அகழ்வாய்வு முடிவுகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

click me!