சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைவதாக கூறிய சாமியார் மீது, பக்தர்களை ஏமாற்றி உண்டியலில் பணம் வசூலித்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் பாசங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி(77 ). தீவிர சிவபக்தரான இவரை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது சந்தித்து ஆசி பெற்று வந்திருக்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கையும் அளித்திருக்கின்றனர்.
இதனிடையே கடந்த 12 ம் தேதி இரவு 12 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 5 மணிக்குள் தான் ஜீவசமாதி அடைய இருப்பதாகவும், அதன்பிறகு உடனடியாக சமாதி எழுப்ப வேண்டும் என்று இருளப்ப சாமி தெரிவித்திருந்தார். இதைக்கேள்வியுற்று சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் பலர் அவரை சந்தித்து ஆசி பெற குவிந்தனர்.
12 ம் தேதி இரவு அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரும் அங்கு முகாமிட்டிருந்தனர். அவர்கள் மருத்துவர்கள் மூலம் இருளப்பசாமியின் உடல்நிலையை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டதால் தற்போது ஜீவசமாதி அடையவில்லை என்று இருளப்பசாமி தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இருளப்பசாமி மீது காவல்துறை தற்போது வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜீவசமாதி அடைவதாக கூறி மக்களை ஏமாற்றி உண்டியலில் பணம் வசூல் செய்ததாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. சாமியாரின் மகன் உட்பட 7 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருளப்ப சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.