மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்..! இந்தியா பார்த்திராத மிக கொடூரம் அது..!

By Manikandan S R S  |  First Published Oct 24, 2019, 11:32 PM IST

1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஆங்கிலேயர்கள் அவர்களை தூக்கில் போட்டனர். அவர்களது உடல்கள் இரண்டு நாட்களாக
தூக்கிலேயே தொங்கியது. இதனால் சிவகங்கை சீமையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.


இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பக்கங்களில் வட இந்தியாவில் நடைபெற்ற போர்களே வீரம் செறிந்த வரலாறுகளாக பெரும்பாலும் காட்டப்பட்டிருக்கும். ஆனால் சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே வெள்ளைய ஏகாப்தியத்தை எதிர்த்து தெற்கில் இருந்து முதன்முதலில் கூக்குரலிட்டவர் மாமன்னர் பூலித்தேவர். அவரை தொடர்ந்து ஆங்கிலேய பேரரசை எதிர்த்தவர் மாவீரர் திப்பு சுல்தான். அவர்கள் வழியில் தீரத்தோடு அந்நிய ஆட்சியை அகற்ற போராடியவர்கள் தான் மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.

Latest Videos

undefined

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல்கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓடஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள். அண்ணன், தம்பிகளான இவர்கள் மன்னர்களாக சிவகங்கை சீமையை ஆளவில்லை. ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் சேதுபதியின் மகள் வேலுநாச்சியார் சிவகங்கை மன்னரான முத்துவடுக நாதருக்கு மணம் முடிக்கப்பட்டதும், மகளின் சாம்ராஜ்யத்திற்கு பாதுகாவலர்களாக சேதுபதி மன்னரால் அனுப்பப்பட்டவர்கள் தான் மருதிருவர்.

1772 ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேய படைகளால் சதித்திட்டம் மூலம் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் அரசி வேலு நாச்சியாரை பாதுகாத்த மருது சகோதரர்கள், திண்டுக்கல் அருகே இருக்கும் விருப்பாட்சி என்கிற இடத்தில் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சேர்க்கின்றனர். அதற்கு பிறகு தலைமறைவு வாழ்கை வாழ்ந்த பெரிய மருதுவும், சின்ன மருதுவும் ஆங்கிலேய ஏகாப்தியத்தை எதிர்ப்பதற்காக படை திரட்ட தொடங்கியிருக்கின்றனர். பாளையக்காரர்களுடன் தொடர்பு ஏற்பட்டு ஊமைத்துரை மருது சகோதர்களுக்கு நெருங்கிய நண்பராகிறார்.

பெரும்படையோடு 1780 ம் ஆண்டு ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்கள் படைகளை வெற்றி கண்டு சிவகங்கை சீமையை மீட்டு மீண்டும் வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்துகிறார்கள். அதன்பின்னர் வேலுநாச்சியார், தனது காலத்திற்கு பிறகு சிவகங்கை மண்ணின் அரச பிரதிநிதியாக மருது சகோதரர்களை அறிவித்தார். வேலுநாச்சியாரின் மறைவிற்கு பிறகு சிவகங்கையை திறம்பட நிர்வகிக்கத்தொடங்கினர் மருது சகோதரர்கள்.

இவர்களின் ஆட்சி காலத்தில் தான் காளையர் கோவில் சீரமைக்கப்பட்டது. குன்றக்குடி முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி  சேவக பெருமாள் கோவிலையும் சீரமைத்தனர். இவர்களது அரசவையில் புலவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றது. நாடக கலைகளும் வளர்ச்சி பெற பல செயல்கள் செய்துள்ளனர். அந்த காலத்திலேயே விதவைகள் மறுமணத்தை மருது சகோதரர்கள் முன்னின்று நடத்தியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலுக்கும், காளையார் கோவில் அருகே இருக்கும் சருகனியிலும் தேர் வழங்கியுள்ளார்கள்.

சிறப்பாக நிர்வாகம் செய்து மருது சகோதரர்களின் ஆட்சி ஆங்கிலேயர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது தம்பி ஊமைத்துரைக்கு மருதிருவர் அடைக்கலம் கொடுக்கின்றனர். அதை காரணமாக வைத்து 1801 ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அவர்களின் போர்திறன் கண்டு வியந்து இங்கிலாந்தில் இருந்து அதிகமான படைபலங்களுடன் ஆங்கிலேயர்கள் வந்து போரிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து மருதிருவர் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன. ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர்.

1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஆங்கிலேயர்கள் அவர்களை தூக்கில் போட்டனர். அவர்களது உடல்கள் இரண்டு நாட்களாக
தூக்கிலேயே தொங்கியது. இதனால் சிவகங்கை சீமையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தியா பார்த்திடாத மிக கொடூரம் அது. முற்றிலும் எதிர்ப்புகளை அடக்கியப்பின்னர், 27ம் தேதி இரண்டு நாட்களாக தூக்கில் தொங்கிய அவர்களது உடல்களை கீழே இறக்கினார்கள். பெரிய அரிவாளால் பலம்கொண்டு வெட்டி மருது சகோதர்களின் தலையை தனியாக எடுத்தனர். மருதிருவரின் விருப்பப்படி காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அந்த தலையை அடக்கம் ஆங்கிலேயர்கள் அடக்கம் செய்தனர். இப்போதும் தங்கள் குலதெய்வமாக அப்பகுதி மக்களால் மருது சகோதரர்கள் வணங்கப்பட்டு வருகிறார்கள்.

அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போர்முழக்கமிட்ட மாமன்னர்கள் மருது பாண்டியர்களை பெருமைப் படுத்தும் விதமாக இந்திய அரசு 2004 அக்டோபர் 24 ம் நாள் அஞ்சல் தலை வெளியிட்டது. மண் காக்க போராடிய நமது பாட்டன்கள் மருதுசகோதரர்களின் புகழ், தமிழ் காலம் உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும்!

click me!