கூட்டுறவுத்துறை அமைச்சர் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தன்னை சிலர் தாக்கியதாக திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கூட்டுறவுத்துறை அமைச்சர் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தன்னை சிலர் தாக்கியதாக ரத்த காயத்துடன் திமுக பிரமுகர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பொய்யலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் திமுக பிரமுகர். இந்நிலையில், நேற்று ஆட்டோவில் வந்த தன்னை சிலர் வழிமறித்து கட்டையால் தாக்கியதாக புகார் கூறி, காரைக்குடி காவல் நிலையம் சென்றவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திமுக பிரமுகரான சரவணன், கடந்த 26ஆம் தேதி கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் தனது மகனுக்கு கல்லூரியில் சீட் வாங்கி தர கேட்டு, அதற்கு அமைச்சர் மறுத்ததால், இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி பதிவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சரவணன் நேற்று இரவு தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்லும் பொழுது சிலர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்தவர், அதற்கு அமைச்சரும் அமைச்சரின் ஆதரவாளர்கள் தான் காரணம் என்றும் புகார் கூறினார்.
ஆனால், மருத்துவ அறிக்கையில் அடித்ததால் ஏற்பட்ட காயம் அல்ல எனவும், ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால் கை, மற்றும் உடலில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
4 மாத கைக்குழந்தையை தரையில் அடித்து கொன்ற பெற்றோர்; சிவகங்கையில் தாய், தந்தை கூட்டாக வெறிச்செயல்
இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷிடம் கேட்டபோது, திமுகவினர் அடித்ததாக புகார் கூறிய சரவணன், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வெளியேறி விட்டதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் விளக்கம் கேட்டபோது, சமூக வலைத்தளத்தில் வேண்டுமென்றே அவதூறு செய்தியை பதிவிட்டுஅமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சரவணன் முயற்சி செய்துள்ளார். அவரை யாரும் அடிக்கவில்லை. 10 பேர் சேர்ந்து கம்பால் தாக்கினால் கை,கால் வீங்கி எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும். இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தடுமாறி விழுந்ததில் ஏற்பட்ட ரத்த காயம்தான் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினர்.