சிவகங்கையைச் சேர்ந்த 3 சகோதரர்கள் யோகா கலையில் உலக சாதனை புரிந்துள்ளனர்.
சிவகங்கையைச் சேர்ந்தவர்கள் பிரணவ்(10), ராகவ்(8), பிரனீத்(5). மூன்று பேரும் சகோதரர்கள். சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்துவரும் இவர்கள் யோகா கலையை தீவிரமாக கற்று வருகின்றனர். பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளும் வென்றுள்ளனர். யோகா கலையில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதே இந்த சிறுவர்களின் குறிக்கோளாக இருந்துள்ளது.
இந்தநிலையில் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக உலக சாதனை நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இதில் சிறுவன் பிரணவ்(10) ஜம்பிங் ஜாக்ஸ் எனும் உடற்பயிற்சியில் ஏற்கனவே இருந்த உலக சாதனையை முறியடித்தார். 1 நிமிடத்தில் 116 முறை அந்த உடற்பயிற்சியை செய்து சாதனை நிகழ்த்தினார். சிறுவன் ராகவ்(8) 3 கிலோ எடையை 30 நிமிடங்கள் 55 விநாடிகள் வயிற்றில் தாங்கி சக்கராசனம் செய்தார். இதற்கு முன்பிருந்த சாதனையை ராகவ் முறியடித்திருக்கிறார்.
அதே போல 5 வயது சிறுவனான பிரனீத் 35 நிமிடம் 10 விநாடிகள் வரை விடாமல் சக்கராசனத்தில் அமர்ந்து சாதனை செய்தார். உலகசாதனை புரிந்து ஆச்சரியப்படுத்திய சகோதர்களை அனைவரும் வியந்து பாராட்டினர். மூன்று சிறுவர்களையும் வாழ்த்திய ஆட்சியர் ஜெயகாந்தன் உலக புத்தக நிறுவன சான்றிதழை வழங்கினார்.