மாஸ் காட்டும் சேலம் மாநகர்..! கொரோனாவை முழுமையாக வென்றது..!

By Manikandan S R SFirst Published May 14, 2020, 3:21 PM IST
Highlights

சேலம் மாநகர் பகுதியிலும் கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கி உள்ளது. அங்கு அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களைச் சேர்ந்த 11 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் தீவிர கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட அனைவரும் மெல்ல மெல்ல குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 500 பேருக்கு குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்திய அளவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் வகித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,176 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது.  தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த போதும் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக குறைந்து வருகிறது. நேற்று வெளியான அறிவிப்பில் 21 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை. தமிழகத்தில் தற்போது வரை ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன.

இந்த நிலையில் சேலம் மாநகர் பகுதியிலும் கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கி உள்ளது. அங்கு அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களைச் சேர்ந்த 11 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் தீவிர கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட அனைவரும் மெல்ல மெல்ல குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் கடந்த 21 நாட்களாக அங்கு புதிய பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக சேலம் மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 30 பேர் நலமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!