அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. ஆட்சியர் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 5, 2021, 11:53 AM IST
Highlights

சேலம் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காட்டிற்கு வெளிமாநில, வெளியூர் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுலா பயணிகள் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. எனவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சேலம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சேலம் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காட்டிற்கு வெளிமாநில, வெளியூர் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுலா பயணிகள் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு தவிர பிற நாட்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து அதில், கொரானா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வருப்பவர்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு அனுமதிக்கப்படுவர்.

ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இருப்பிட விலாசத்திற்காக ஆதார் அல்லது குடும்ப அட்டை , ஸ்மார்ட் கார்டில் ஏதாவது ஒன்றினை காட்டினால் மட்டுமே ஏற்காட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

click me!