தீவிரமாகும் ஊரடங்கு நடைமுறை..! நாமக்கல்,சேலம் மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள்..!

By Manikandan S R S  |  First Published Apr 9, 2020, 11:14 AM IST

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நடைமுறை கடுமையாக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் கடைகள் திறக்கும் நாட்கள் குறைக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எட்டு பேர் பலியாகி இருக்கின்றனர். 21 நபர்கள் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகள் அன்றி வேறு எக்காரணம் கொண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் தருவாயில் அது மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நடைமுறை கடுமையாக்கப்பட்டு வருகிறது.

பல மாவட்டங்களில் கடைகள் திறக்கும் நாட்கள் குறைக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பொது மக்கள் வெளியே வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். மாவட்டம் முழுவதும் மூன்று வண்ணம் கொண்ட அனுமதி அட்டை ஒன்று மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த அட்டை வைத்திருப்பவர்கள் வாரத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் மட்டும் கடைகளுக்கு வந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

பச்சை நிற அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், நீலநிற அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 15 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளிவர வேண்டும் என்றும் அவ்வாறு வரும் நேரத்தில் மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். இந்த நடைமுறை இன்று முதல் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

இதேபோல சேலம் மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மளிகை காய்கறிகள் வாங்க மக்கள் கடைகளுக்கு அனுமதிக்கப்படுவர் என காவல்துறை தெரிவித்திருக்கிறது. சேலம் மாவட்டத்திலும் இன்று முதல் 144 தடை உத்தரவு தீவிரமாக அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

click me!