தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு..? முக்கிய முடிவெடுக்கிறார் முதல்வர் எடப்பாடி..!

By Manikandan S R S  |  First Published May 15, 2020, 11:32 AM IST

தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.


இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் 66 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு 4ம் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைகள் மிகக்கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

இந்த நிலையில் மே 17ம் தேதியுடன் 3ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ளது. எனினும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் எனவும் அவை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகக் கூடும். இதனிடையே தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.

ஊரடங்கு காரணமாக உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்டவற்றை தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கருத்து கேட்கிறார். அப்போது நாட்டில் அமலாகியிருக்கும் ஊரடங்கால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள் குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சரிடம் விளக்கவுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொழில் கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

click me!