அறந்தாங்கி அருகே விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட பதாகையில் காஷ்மீர் நிகழ்வு குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளதால் அது சர்ச்சையை கிளம்பி இருக்கிறது.
கடந்த 5 ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35A ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்டு விட்டது. மிகவும் ரகசியமாக செயல்படுத்தப்பட இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது.
அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு பாஜகவை சேர்ந்த முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் முரளிதரன் பதாகை வைத்திருக்கிறார். அதில் பிரதமர் மோடியின் படத்துடன் 'காஷ்மீரை மீண்டும் இந்தியாவிற்கு தந்த கணபதி எனவும், இந்துக்களை காத்த மோடி' என்ற சர்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதனால் காவல்துறையினர் அவரை தொடர்பு கொண்டு அந்த பதாகையை அகற்ற சொல்லி இருக்கின்றனர். ஆனால் அதை மறுத்த முரளிதரன், பதாகை அகற்றப்பட்டால் பாஜக சார்பாக போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார்.
காவல்துறையின் அறிவுறுத்தலையும் மீறி வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதாகையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.