நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் 2023ல் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது, இதுதொடர்பாக ஒன்றிய அரசும் ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த சீராய்வு மனுவின் அடிப்படையில் என்ன தீர்ப்பு கிடைக்கிறதோ அதனை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தான் ஆக வேண்டும்,
இருந்தாலும் நீதிபதிகளின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்றார்.
செந்தில் பாலாஜி கைது: அதிமுக மாஜிக்களுக்கு இறுகும் பிடி? ஸ்டாலின் கணக்கு?
அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து கேட்ட போது, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்கின்ற போது நீதிமன்றத்திற்கு சென்று அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள், இந்த மருத்துவமனையில் சிகிச்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்கின்றபோது அதற்கான உத்தரவை தருகின்ற உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு. இதில், நாங்கள் எந்த உத்தரவையும் தரவில்லை. நீதிமன்றம் பார்த்து செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது நாங்களாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.