தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த ஒரு மாவட்டத்தில் முதல் ஆளாக ஒரு நபர் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மாலை நேர நிலவரப்படி, 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கடந்த ஒருவாரத்தில் நேற்று தான் சற்று அதிகமாக 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும், தமிழ்நாட்டு மருத்துவர்களின் தரமான சிறப்பான சிகிச்சையின் மூலம் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிவருகின்றனர். இதுவரை 411 பேர் குணமடைந்துள்ளனர். 16 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 285 பேரும், அதற்கடுத்தபடியாக கோவையில் 133 பேரும் திருப்பூரில் 108 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக, கொங்கு மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. ஈரோடு, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகவுள்ளது.
ஆனால் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களாக இருந்துவந்தன. இந்நிலையில், புதுக்கோட்டையில் முதல் முறையாக ஒரு நபர் கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா இல்லாத சில மாவட்டங்கள் இருந்தது சற்று ஆறுதலாக இருந்துவந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சற்று சோகமானதுதான். ஏனெனில் அவருக்கு கொரோனா உறுதியானால், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் பரிசோதிக்க நேரிடும்.