புதுக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் விவசாயம் பார்த்து வரும் நிலையில் இவர் தமது வயலில் விளைந்த மற்றும் கடைகளில் சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் கிலோ எடையுள்ள புடலங்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை புதுக்கோட்டை பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு சென்று இலவசமாக கொடுத்து வருகிறார்.
உலக அளவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளிவர அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை விநியோகிக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் மக்களுக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் தான் விளைவித்த காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். புதுக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் விவசாயம் பார்த்து வரும் நிலையில் இவர் தமது வயலில் விளைந்த மற்றும் கடைகளில் சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் கிலோ எடையுள்ள புடலங்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை புதுக்கோட்டை பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு சென்று இலவசமாக கொடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது தான் ஒரு விவசாயி என்பதால் மக்கள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதற்காக உணவு தயார் செய்து விநியோகிக்க எண்ணியதாகவும் ஆனால் அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே தான் விளைவித்த மற்றும் கடைகளில் வாங்கிய காய்கறிகளை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று இலவசமாக கொடுப்பதாக கூறியுள்ளார்.