புதுக்கோட்டையில் சர்ச்சைக்குள்ளான கோவிலில் சமத்துவ பொங்கல்; ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

By Velmurugan sFirst Published Dec 30, 2022, 10:49 AM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கோவிலில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது அப்பகுதியில் உள்ள கோவிலில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர அனுமதி மறுக்கப்படுவது, அருகாமையில் உள்ள தேனீர் கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீண்டாமை சம்பவங்கள் அரங்கேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சபரிமலை; மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

இதனைத் தொடர்ந்து தீண்டாமை செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்டப்பட நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களை தாமாக கோவிலுக்குள் அழைத்துச் சென்று அனைவரையும் வழிபாடு செய்ய வைத்தார்.

புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழகம் முழுவதும் 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இந்நிலையில் நேற்று அதே கோவிலில் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஊருக்குள் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் மேல தாளங்கள் முழங்க அரசு அதிகாரிகளால் கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோவிலில் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி, இறையூர் கிராமம், அய்யனார் கோவிலில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பொதுவழிபாடு மற்றும் சமத்துவ பொங்கல் pic.twitter.com/80VcoNyzyg

— District Collector, Pudukkottai (@pdkt_collector)

இந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தங்களை கோவிலுக்குள் அழைத்து வந்து, தங்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்ததற்காக ஆட்சியர் கவிதா ராமுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

click me!