ராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற போது நிறைமாத கர்ப்பிணி மீது கார் மோதியது. இதில், சத்தியப்பிரியாவும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற போது நிறைமாத கர்ப்பிணி மீது கார் மோதியது. இதில், சத்தியப்பிரியாவும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். லாரி ஓட்டுநர். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சத்தியப்பிரியாவுக்கும் (21) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சத்தியப்பிரியா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மாமியார் சத்தியப்பிரியாவை பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு பேருந்தில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து, பரிசோதனை முடிந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். பெருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினர். அப்போது பலத்த மழை மற்றும் மின்தடையும் ஏற்பட்டது. அப்போது, இருவரும் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில், வள்ளி மற்றும் நிறைமாதம் கர்ப்பிணியான சத்தியப்பிரியா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பெற்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை ஆம்புலன்சு மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சத்தியப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, பலியான சத்தியப்பிரியாவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது ஆண் சிசு இறந்த நிலையில், சத்யபிரியாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் தாய், சிசு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.