வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.