குடிமகன்களுக்கு குட்நியூஸ்.. காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ.10 பெறலாம்..!

By vinoth kumarFirst Published May 16, 2022, 9:05 AM IST
Highlights

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளை நிலங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் வீசி வருவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளை நிலங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் வீசி வருவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். வனப்பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுச்சூழலும் மாசு ஏற்பட்டு வருகிறது. 

இதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நீலகிரியில் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்கள், அணை பகுதிகள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வீசி எறியப்படும் காலி மதுபாட்டில்களை சேகரித்து அகற்றும் பணி கடந்த 11ம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள 75 மதுபான கடைகளிலும் நேற்று முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அவ்வாறு  விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி பாட்டில்களை மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மீண்டும் கொடுத்து ரூ.10ஐ திரும்ப வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!