காலை மீண்டும் சத்தம் கேட்கவே கிராமவாசிகள் கூட்டமாக சென்று பார்த்தனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகிலேயே தாய் நின்று சத்தமிட்டு கொண்டிருந்தது.குட்டி யானை இறந்து கிடப்பதை அறியாமல் தாய் யானை அதை எழுப்ப முயன்று இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கிறது நாயக்கன்சோலை கிராமம். மலையடிவாரத்தை ஒட்டி இருக்கும் இக்கிராமத்தில் அடிக்கடி யானைகள் கூட்டமாக வரும் என்று கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெரும்பாலும் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாமல் இருந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று தொடர்ந்து சத்தமிட்டு இருந்துள்ளது. கிராமத்தை சேர்ந்த சிலர் சத்தம் வந்த திசையை நோக்கி சென்று பார்த்துள்ளனர்.
அங்கு யானை ஒன்று நிற்பது தெரிந்திருக்கிறது. இரவு நேரமாக இருந்ததால் அவர்கள் உடனடியாக திரும்பி சென்றுள்ளனர். காலை மீண்டும் சத்தம் கேட்கவே கிராமவாசிகள் கூட்டமாக சென்று பார்த்தனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகிலேயே தாய் நின்று சத்தமிட்டு கொண்டிருந்தது.குட்டி யானை இறந்து கிடப்பதை அறியாமல் தாய் யானை அதை எழுப்ப முயன்று இருக்கிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத்துறை காவலர்கள் தாய் யானையை விரட்டி குட்டி யானையின் உடலை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் தாய் யானை அங்கிருந்து நகராமல் இருந்துள்ளது. காலையில் இருந்து யானையை விரட்ட பலகட்ட முயற்சி எடுத்தும் பலனளிக்காததால் பொதுமக்களை வனத்துறையினர் கலைந்து போக அறிவுறுத்தினர். காட்டு யானை அதுவாக அந்த இடத்தை விட்டு செல்லும் வரை யாரும் அதை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது குட்டி இறந்து கிடப்பது தெரியாமல் தாய் யானை அதை எழுப்ப முயன்ற காட்சி அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.