குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நீலகிரியில் இருக்கும் ஒரு அரசு பள்ளியில் மாணவி ஒருவர் ஒரு நாள் தலைமை ஆசிரியையாக அறிவிக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கிறது முக்குட்டி கிராமம். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இக்கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி இருக்கிறது, இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்த நிலையில் நேற்று குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முக்குட்டி கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாட ஆசிரியர்கள் முடிவு செய்தனர். பள்ளியிலேயே சிறந்த மாணவர் அல்லது மாணவியை தேர்ந்தெடுத்து ஒரு நாள் தலைமை ஆசிரியர் என்கிற கௌரவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் என அனைத்திலும் முன்னிலை வகிக்கும் தர்ஷினி என்கிற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நாள் தலைமை ஆசிரியை தர்ஷினியை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தனர். அவரிடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பள்ளியில் மேற்கொள்ள பணிகள் குறித்தும், தங்களது குறைகளையும் கூறினர். அனைத்தையும் கவனமாக கேட்ட ஒருநாள் தலைமை ஆசிரியை தர்ஷினி, விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுகுறித்து கூறிய அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறினர்.