குன்னூர் அருகே லாரிக்கு வழிவிட முயன்ற அரசு பேருந்து ஒன்று 20 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஊட்டிக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 25 பயணிகள் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இருக்கும் காட்டேரி பூங்கா அருகே பேருந்து வந்து கொண்டிருந்தது. அதே சாலையில் எதிரே ஒரு லாரி வேகமாக வந்துள்ளது.
ஒரு வளைவின் அருகே வந்த போது பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர், லாரிக்கு வழிவிடும் வகையில் பேருந்தை திருப்பி இருக்கிறார். அப்போது அங்கிருந்த தடுப்புச் சுவரில் பேருந்து மோதியிருக்கிறது. இதில் சுவர் இடிந்துள்ளது. இதன்காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 20 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சல் போட்டுள்ளனர். அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் தீயணைப்பு படையினரின் உதவியுடன் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் ஊட்டிக்கு அனுப்பி வைக்கட்டப்பட்டனர்.
தற்போது பெய்து வரும் கனமழையால் அந்த சாலையில் பனிமூட்டம் இருந்திருக்கிறது. இதன்காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.