கோத்தகிரி பகுதியில் நீட் எதிர்ப்பு பிரசாரம் பிரிவினையை தூண்டும் வகையில் குறிப்பிடப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே தமிழகத்தில் அதற்கான எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு சமயத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. முன்னதாக தமிழகத்தில் மட்டும் வெடித்து வந்த நீட் எதிர்ப்பு இன்று பல்வேறு மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பகுதியில் சாலை ஓர சுவர்களில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் மட்டுமல்லாது, தேசத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வாசகமும் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், அந்த வாக்கியங்களை வண்ணம் பூசி அழித்தனர். இந்நிலையில். பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இடம் பெற்றிருந்த வாக்கியங்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன.
திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். திரு.மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.