மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதியடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராமப் பகுதியை சுற்றி காட்டுயானை உலா வருகிறது. இந்த காட்டு யானையை கண்காணிக்க வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு கிராமத்திற்குள் வருவதை தடுக்கும் வகையில் நாள்தோறும் வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை வாழைத்தோட்டம் கிராமத்திற்குள் திடீரென இந்த காட்டு யானை ராஜ நடை போட்டு உலா வந்தது. நீண்ட நேரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் மரக்கிளைகளை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சம் அடைந்ததோடு வீடுகளை விட்டு வெளியே வராமல் தஞ்சம் அடைந்தனர். மேலும் வனத்துறையினர் வாகனத்தின் மூலம் யானையை விரட்டியடிக்கும் பொழுது ஓடிய யானை இரண்டு முறை வனத்துறை வாகனத்தின் முன் நின்று தாக்க முயன்றது இதனால் வனத்துறையினரும் அச்சம் அடைந்தனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் யானையை வனத்துறையினர் அடர் வனப் பகுதிக்குள் விரட்டினர்.
வனப்பகுதிக்குள்ளேயே இருந்த காட்டு யானை திடீரென கிராமத்திற்குள் உலா வருவது கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.