தமிழகத்தின் முதல் 'திருநங்கை' கவுன்சிலர்..! திமுக சார்பாக வெற்றி..!

By Manikandan S R SFirst Published Jan 2, 2020, 1:12 PM IST
Highlights

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ரியா என்பவர் போட்டியிட்டார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த அவர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. அமமுகவும் சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய நிலவரப்படி மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் திமுக 57 இடங்களிலும் அதிமுக 36 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதே போல ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் அதிமுக 70 இடங்களிலும் திமுக 49 இடங்களிலும் அமமுக 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. பிறகட்சிகளான காங்கிரஸ்,மதிமுக,கம்யூனிஸ்ட்கள் போன்றவையும் ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது.

இந்தநிலையில் திமுக சார்பாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ரியா என்பவர் போட்டியிட்டார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

click me!