1 லட்சத்து 8 வடைகள்..! 18 அடி உயர கம்பீர அனுமன் சிலை..! கோலாகலமாக கொண்டாடப்படும் ஆஞ்சநேய ஜெயந்தி..!

By Manikandan S R SFirst Published Dec 25, 2019, 1:06 PM IST
Highlights

ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடைகளால் உருவாக்கப்பட்ட வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அனுமன் கோவில்களில் இன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நாமக்கல்லில் இருக்கும் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 5 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு வடைகளால் உருவாக்கப்பட்ட வடைமாலை ஆஞ்சநேயர் சிலைக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வடைமாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். காலை 11 மணி வரை வடைமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். அதன் பிறகு ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தயிர், சந்தனம், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது.

இதற்காக நேற்று முதலே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோவிலில் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் தான் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு அந்த நாளில் சூரியகிரகணம் வருவதால் ஒருநாள் முன்பாக ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு ஆன்மீக அன்பர்கள் முடிவெடுத்தனர். அதன்படி நாளை சூரிய கிரகணம் வருவதால் அதற்கு முந்தைய நாளான இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு  சேலம், தர்மபுரி, திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில் வளாகத்தை சுற்றிலும் 45 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவலர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

click me!