மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா? என்று விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் மக்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2015 ம் ஆண்டு முதல் சேவையில் இருக்கிறது. பொதுமக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், தற்போது மேலும் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த நேரத்திற்கு சென்றடைவதால் வேலைக்கு செல்பவர்களுக்கு மெட்ரோ ரயில் மிகவும் பயனளிக்கிறது.
இதனிடையே சென்னையை போன்றே மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பட்டுள்ளது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாணிக் தாகூர் எம்.பி இதுகுறித்து கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, தமிழக அரசு கோரிக்கை வைத்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டம் என்பது மாநில அரசின் கீழ் வரும் திட்டம் என்பதால் முதலில் சம்பந்தப்பட்ட மாநில அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார். தமிழக அரசு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவருவது தொடர்பாக கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் மத்திய அரசு அதை பரிசீலனை செய்யும் என்றார். மேலும் தமிழக அரசு இதுவரையிலும் அவ்வாறு எந்த கோரிக்கையும் வைக்காததால் மத்திய அரசிடம் அப்படி எந்த திட்டமும் தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.