மதுரை மாநகர் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து தலைமை காவலர் ஆகிய இருவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிறையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
மதுரை மாநகர் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து தலைமை காவலர் ஆகிய இருவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவரையும் தனிமை சிகிச்சையில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவலர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரோடு தொடர்பில் இருந்த அனைவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் 71 காவலர்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையம் மூடப்பட்டு அங்கு பணிக்கு காவலர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தெற்கு வாசல் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் யாரும் செல்ல முடியாத வகையில் கதவு அடைக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இன்று முதல் தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில் காவல் நிலைய பணி நடைபெற இருப்பதாக காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.