மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தி.மு.க. 12, அ.தி.மு.க. 9, அ.ம.மு.க. 2, காங்கிரஸ் 1 வார்டுகளில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்தது. தலைவர் பதவி வேட்பாளராக 10-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வைச் சேர்ந்த செல்வி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் 11-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் சகுந்தலா என்பவரும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். தி.மு.க. தலைமை தலைவர் பதவிக்கு வேட்பாளராக செல்வியை அறிவித்திருந்த நிலையில், அவருக்கு போட்டியாக அதே கட்சியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் சகுந்தலா மனுத்தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
undefined
இதற்கு செல்வி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இருந்தபோதிலும் அவர்கள் அங்கேயே திரண்டு நின்றனர். இதனால் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.