துணியால் மறைக்கப்பட்ட பந்தல்குடி கால்வாய்! ஸ்டாலின் நேரில் ஆய்வு! அதிகாரிகளுக்கு உத்தரவு!

Published : Jun 01, 2025, 07:32 AM IST
Pandalkudi canal

சுருக்கம்

மதுரையில் பந்தல்குடி கால்வாயை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் ரோடு ஷோ நடத்துவதற்காக இந்த கால்வாய் துணியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

MK Stalin Inspection Madurai Pandalkudi Canal: திமுகவின் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக நேற்று மதுரை சென்றடைந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவனியாபுரத்தில் இருந்து, ஜீவாநகர், ஜெயந்தி நகர் வழியாக சுமார் 25 கிமீ தூரத்துக்கு 3 மணி நேரம் பிரம்மாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டார். அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஸ்டாலின் வருகைக்காக கால்வாய் துணி வைத்து மறைப்பு

பின்பு முதல்வர் ஸ்டாலின் மதுரை முதல் மேயர் திரு. எஸ் . முத்து அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர் மு.க.அழகிரியின் வீட்டுக்கு சென்று இரவு உணவு உண்டார். இன்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். முன்னதாக மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துவதற்காக பந்தல்குடி கால்வாய் தெரியாமல் இருப்பதற்காக திமுகவினர் அதனை துணியால் வைத்து மறைத்து இருந்தனர்.

பொதுமக்கள் கடும் கண்டனம்

இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்தன. குஜராத்தில் செய்வதை போல் தமிழ்நாட்டிலும் திமுக செய்வதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த துணி அகற்றப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மு.க.அழகிரி வீட்டில் இருந்து சுற்றுலா மாளிகைக்கு செல்லும் வழியில் பந்தல்குடி வாய்க்காலை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பந்தல்குடி கால்வாயில் ஸ்டாலின் ஆய்வு

கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்தல்குடி வாய்க்கால், பீ.பீ. குளம் வாய்க்கால், அனுப்பானடி வாய்க்கால் ஆகியவற்றில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று (31.5.2025) பந்தல்குடி வாய்க்காலை ஆய்வு செய்து தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுசுவர்களை கட்டும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதாவுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவு

மாநகராட்சியின் சார்பில் தூர் வாரும் பணிகளுக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், நீர்வளத் துறையின் சார்பில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு 63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகளை மேற்கொள்வதற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விரைந்து அதற்கான அரசாணையை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது உடன் இருந்த அமைச்சர்கள்

இந்த ஆய்வின்போது வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கோ.தளபதி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!