தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே துறை சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அக்டோபர் 27ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஞாயிறு அன்று வருவதால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தங்கள் பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர். தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமையும் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் விடுமுறை எடுத்து சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வார்கள்.
இதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் முன்பதிவு செய்து நிரம்பிவிட்டது. காத்திருப்போர் பட்டியலிலும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தீபாவளி பண்டிகைக்காக மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து சிறப்பு ரயில்களை தீபாவளிப் பண்டிகைக்காக இயக்க இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை, கோவை, நாகர்கோவில், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பிருக்கும் நிலையில் எத்தனை ரயில்கள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.