தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வந்தது. இதனால் முக்கிய அணைகள் பல வேகமாக நிரம்பி வந்தன. விரைவில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வடக்கு உள்தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
நேற்று காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கத்தில் 8 செமீ, கிருஷ்ணகிரியில் 7 செமீ, வேலூர் மாவட்டம் ஆம்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, ஈரோடு ஆகிய இடங் களில் தலா 4 செமீ பதிவானது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது