24 மணி நேரத்திற்கு மீண்டும் மழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

By Manikandan S R SFirst Published Oct 4, 2019, 4:28 PM IST
Highlights

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்பசலனம் காரணமாக வடக்கு உள்மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவகாலம் நிறைவடையும் தருவாயில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெப்பசலனம் காரணமாக வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் 3 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூர், தென்காசி, வால்பாறை, ஈரோடு மாவட்டம் பவானி ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

click me!