எச்ஐவி ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
எச்ஐவி ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டது. இதையடுத்து பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், எச்ஐவி ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், ரூ.10 லட்சம் குழந்தையின் தாயின் பெயரிலும், ரூ.15 லட்சம் குழந்தைகள் பெயரிலும் வங்கியில் செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 450 சதுர அடிக்கு குறையாமல் இரு படுக்கையறை வீடு கட்டித்தரவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை 2020 ஜனவரி 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.