நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உண்மையிலேயே நல்லவர், அவரிடம் பணமும் கொடுக்கவில்லை, ஏமாறவும் இல்லை என்றும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர் என்று சீனியம்மாள் கூறியுள்ளார்.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உண்மையிலேயே நல்லவர், அவரிடம் பணமும் கொடுக்கவில்லை, ஏமாறவும் இல்லை என்றும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர் என்று சீனியம்மாள் கூறியுள்ளார்.
நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதலில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் கொள்ளையர்கள் தான் கொலையை செய்திருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகித்தனர். பின்னர், அரசியல் போட்டி காரணமாக கூலிப்படையை ஏவி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது. இந்த கொலையில் திமுக பெண் பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவியது.
இதனையடுத்து, மதுரையில் உள்ள தி.மு.க.வின் ஆதி திராவிடர் குழு மாநில துணைச் செயலாளராக இருக்கும் சீனியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உமா மகேஸ்வரியுடன் ஏற்பட்ட தொடர்பு மற்றும் அரசியல் ஈடுபாடு, அரசியல் முன் விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், எனக்கு உடல்நலம் சரி இல்லாத காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றேன். நான் மாநில நிர்வாகி, கொலையான உமா மகேஸ்வரி மாவட்ட நிர்வாகி. கட்சி பதவிக்காகவோ அல்லது தேர்தலில் சீட் வாங்கி தரவேண்டும் என்றோ நான் அவரிடம் பணம் கொடுத்து ஏமாறவில்லை. கொலையான உமா மகேஸ்வரி உண்மையிலேயே நல்லவர். உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டது நான் டி.வி செய்தியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், காவல்துறை சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரித்தால் அவர்கள் அனைவரும் குற்றவாளி கிடையாது. என் மீது குற்றம்சாட்டி தி.மு.க.விற்கு அவபெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர். காவல்துறை உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றார். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக சீனியம்மாளிடம் விசாரணை நடைபெற்றது. கொலை தொடர்பாக துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.