சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொரோனா தாக்கி மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாதாரண பிரச்சினைக்காக கைது செய்யப்பட்ட தந்தை - மகனை போலீஸார் அடித்துக் கொன்ற விவகார விஸ்வரூபமெடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தமிழக சிபிசிஐடியினர் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் என 10 பேரை கைது செய்தனர். விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. பால்துரையும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து தற்போது விசாரித்துவருகிறது. வழக்கு விசாரணையின்போது சிபிஐ அதிகாரிகள் பலர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் வழக்கில் கைதான பால்துரைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கொரோனா தொற்று சிகிச்சைக்காக கடந்த 15 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் பால்துரை அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 56 வயதான பால்துரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.