தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று வலுவிழந்து இருப்பதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை குறைந்துள்ளது. தமிழக பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதுவும் இல்லாத காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனி வரும் நாட்களில் மழை குறைந்து காணப்படும். மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை, வேலூர் மாவட்டம் ஆலந்தூர், குடியாத்தம் ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.