மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுமி சமீபத்தில் உயிரிழந்தார். அதை தொடர்ந்து கோவையில் 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மரணம் அடைந்தார். அதுமட்டுமின்றி டெங்கு காய்ச்சல் பாதிப்பு பல இடங்களில் அதிகரித்து வருவதாகவும் காய்ச்சலுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த பஞ்சவர்ணம், சித்ரா என்கிற இரு பெண்களும் கே.வி.புதூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த சுபஸ்ரீ, திருச்சியைச் சேர்ந்த நாகராஜன் ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 5 பேருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு சார்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தண்ணீர் தேங்கி கிடக்காமல் இருக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் வந்தால் உடனடியாக சிகிச்சை பெறவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.