மதுரை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமன்னூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாருலதா. இவர்கள் சொந்தமாக ஆம்னி மாருதி வேன் வைத்திருக்கிறார்கள். அதில் இருவரும் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் உறவினரைக் காண சென்று கொண்டிருந்தனர். ஆம்னி வேனை வெங்கடேசன் ஓட்டி வந்திருக்கிறார்.
மதுரை அருகே இருக்கும் கூத்தியார் கூண்டு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆம்னி வேன் தீ பிடித்து எரிந்தது. வேனில் இருந்து புகை வருவதை பார்த்ததும் கணவன் மனைவி இருவரும் உடனடியாக வெளியேறி விட்டனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையைச் சேர்ந்த வீரர்கள் வருவதற்குள் வாகனத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டது. மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தியதில் வெங்கடேசன் வைத்திருந்த வாகனம் எல்பிஜி எரிவாயு பொருத்தி இயக்கப்பட்டதும், அதன் காரணமாக தீ பிடித்திருக்க கூடும் என்று தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.